உள்ளூர் விமானப் பயணக் கட்டணம் பன்மடங்கு அதிகரிப்பு

  தமிழ் முரசு
உள்ளூர் விமானப் பயணக் கட்டணம் பன்மடங்கு அதிகரிப்பு

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் பயணக் கட்டணம் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.ஆயுத பூசை, விஜயதசமி மற்றும் வார இறுதிநாள்கள் எனத் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதனைப் பயன்படுத்தி, பெரும்பாலான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ரயில்களில் தென் மாவட்டங்களுக்கான முன்பதிவு பயணச்சீட்டுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.இதனிடையே, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.3,000 வரை பயணச்சீட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.அதனால், சொந்த ஊருக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்போர் வேறு வழியின்றி விமானங்களை நாடுகின்றனர்.திடீரென்று விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் வியாழக்கிழமை (அக்டோபர் 10) பயணக் கட்டணங்கள் தாறுமாறாக ஏறின. சென்னை – மதுரைக்கான வழக்கமான விமானப் பயணக் கட்டணம் ரூ.4,200 என இருந்த நிலையில் வியாழக்கிழமை ரூ.12,026 முதல் 18,626 வரை அதிகரித்துவிட்டது.சென்னை – தூத்துக்குடி விமானப் பயணக் கட்டணம் ரூ.5,006ல் இருந்து ரூ.11,736 முதல் ரூ.13,626 வரை ஏறிவிட்டது.அதேபோல, சென்னை – கோவைக்கு இடையேயான கட்டணம் ரூ.3,290ல் இருந்து ரூ.10,996க்கு உயர்ந்துள்ளது.சென்னை – சேலம் இடையிலான வழக்கமான விமானப் பயணக் கட்டணம் ரூ.3,317ல் இருந்து 10,792க்கு அதிகரித்துவிட்டது.வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களில் விமானப் பயணக் கட்டணம் இன்னும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் வழக்கத்தைவிட பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதே அதற்குக் காரணம்.

மூலக்கதை