நோபெல் பரிசு: செயற்கை நுண்ணறிவு ஆய்வு குறித்து கேள்விகள்

  தமிழ் முரசு
நோபெல் பரிசு: செயற்கை நுண்ணறிவு ஆய்வு குறித்து கேள்விகள்

லண்டன்: கூகல் தளத்துடன் தொடர்புடைய சிலருக்கு இந்த வாரம் வேதியியல் (chemistry), இயற்பியலுக்கான நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டன.செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களாகக் கருதப்படும் அவர்களுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், கணினி அறிவியலில் இடம்பெறும் சாதனைகள் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று வல்லுநர்கள் குரல் கொடுத்துள்ளனர்.செயற்கை நுண்ணறிவு ஆய்வில் கூகல் முன்னணியில் இருந்து வருகிறது. எனினும், மைக்ரொசாஃப்ட்டின் ஆதரவுடன் செயல்படும் ஓப்பன்ஏஐ நிறுவனத்திடமிருந்து வரும் போட்டி, கட்டுப்பாடுகள் விதிப்பதன் தொடர்பில் அமெரிக்க நீதிப் பிரிவு தரும் நெருக்குதல் ஆகியவற்றை எதிர்கொள்வதால் கூகல் சவால்களையும் எதிர்நோக்குகிறது.கூகலின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவான டீப்மைண்டை (DeepMind) நிறுவியவர்களில் ஒருவரான டாக்டர் டெமிஸ் ஹசாபிஸ், அவரின் சக ஊழியரான டாக்டர் ஜான் ஜம்பர், அமெரிக்க உயிர் வேதியியல் விஞ்ஞானியான டேவிட் பேக்கர் ஆகியோருக்கு புதன்கிழமையன்று (அக்டோபர் 9) வேதியியல் நோபெல் பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் கூகல் ஆய்வாளர் ஜியோஃப்ரி ஹின்டன், அமெரிக்க விஞ்ஞானி ஜான் ஹொப்ஃபீல்ட் ஆகியோர் இயற்பியலுக்கான நோபெல் பரிசை வென்றனர்.கணினி விஞ்ஞானியும் செயற்கை நுண்ணறிவு குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருப்பவருமான பேராசிரியர் டேம் வெண்டி ஹால், கணக்கு, கணினி அறிவியல் போன்ற துறைகளில் போதுமான நோபெல் பரிசுகள் வழங்கப்படாதது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அதிருப்தி தெரிவித்தார்.பென்ட்லி பல்கலைக்கழகத்தில் துணை கணக்குப் பேராசிரியாகப் பொறுப்பு வகிக்கும் டாக்டர் நோவா ஜியான்சிராக்குசா, டாக்டர் ஹின்டன் நோபெல் பரிசை வென்றது குறித்து கேள்வி எழுப்பினார். செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் உருவெடுப்பதற்கு முன்பு அதற்கான அடித்தளத்தை போட்டதற்கு டாக்டர் ஹின்டனுக்கு நோபெல் பரிசு கொடுத்து அங்கீகரிக்கப்பட்டது. அவரின் சாதனை பெரிதானது என்றாலும் அது இயற்பியல் சம்பந்தப்பட்டதா என்பது கேள்விக்குரியே என்றார் டாக்டர் ஜியான்சிராக்குசா.

மூலக்கதை