100 இந்தியப் பணக்காரர்களின் கூட்டுச் செல்வம் முதல் முறையாக ஒரு டிரில்லியன் டாலரைத் தொட்டது

  தமிழ் முரசு
100 இந்தியப் பணக்காரர்களின் கூட்டுச் செல்வம் முதல் முறையாக ஒரு டிரில்லியன் டாலரைத் தொட்டது

புதுடெல்லி: இந்தியாவின் முதல் 100 பணக்கார இந்தியர்களின் மொத்த மதிப்பு முதல்முறையாக 2024ல் ஒரு டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது என்று ‘ஃபோர்ப்ஸ்’ சஞ்சிகை கூறியிருக்கிறது.முதல் நூறு பணக்கார இந்தியர்களின் செல்வம், கடந்த ஆண்டு 779 பில்லியன் டாலரிலிருந்து 40 விழுக்காடு அதிகரித்து ஒரு டிரில்லியன் டாலரைத் தாண்டியிருக்கிறது என்று தனது செய்தியறிக்கையில் ‘ஃபோர்ப்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளைச் செய்து வருவதால் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக அவர்களின் செல்வம் பெருகியிருக்கிறது.இத்தகைய முதலீட்டின் உச்சத்தால் பிஎஸ்இ (மும்பை பங்குச் சந்தை) சென்செக்ஸ் குறியீடு கடந்த ஆண்டைவிட 30 விழுக்காடு கூடியது. மேலும் பணக்காரர்களில் எண்பது விழுக்காட்டிற்கும் அதிகமானோருக்கு கடந்த ஆண்டில் செல்வம் அதிகரித்துள்ளது. “இந்தியாவின் வளர்ந்து வரும் பங்குச் சந்தைகள் அதன் பணக்கார முதலாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.மேலும் அவர்களில் பலர் தங்களுடைய அதிர்ஷ்டம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைக் கண்கூடாகக் காண்கின்றனர்.இதன் காரணமாக இந்தியாவின் 100 பணக்காரர்களின் கூட்டுச் செல்வம் டிரில்லியன் டாலர் மைல்கல்லைத் தாண்டியிருக்கிறது என்று ‘ஃபோர்ப்ஸ் ஏசியா’ இந்தியாவுக்கான ஆசிரியர் நாஸ்நீன் கார்மாலி தெரிவித்தார்.ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய செல்வந்தர்களில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கௌதம் அம்பானியும் அவரது குடும்பமும் டாலர் அடிப்படையில் அதிக லாபத்தைப் பெற்றுள்ளனர்.அம்பானியின் செல்வத்தில் 27.5 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. அதானி குடும்பத்திற்கு மேலும் 48 பில்லியன் டாலர் செல்வம் சேர்ந்துள்ளது.மருந்தகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் குறிப்பிடும்படி செல்வம் கூடியிருக்கிறது.சன் ஃபார்மசிடிக்கல் நிறுவனர் திலிப் ஷாங்கவி கடந்த ஆண்டிலிருந்து மூன்று நிலைகள் முன்னேறி இந்தியாவின் ஐந்தாவது பணக்காரராக ஆகியுள்ளார். கடந்த ஆண்டில் 19 பில்லியன் டாலராக இருந்த அவரது செல்வம் 32.4 பில்லியன் டாலருக்கு அதிகரித்துள்ளது.டோரெண்ட் குழுமத்தின் மேத்தா சகோதரர்களின் செல்வமும் இரண்டு மடங்கு கூடி 16.3 பில்லியன் டாலருக்கு உயர்ந்தது.

மூலக்கதை