வங்காளதேசத்தில் உள்ள காளி தேவி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் திருட்டு

  தினத்தந்தி
வங்காளதேசத்தில் உள்ள காளி தேவி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் திருட்டு

டாக்கா,வங்காளதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்து புராணங்களின்படி, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி பிரதமர் மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்த கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் அங்குள்ள காளி தேவி சிலைக்கு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்நிலையில், பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் தற்போது திருடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கோவில் பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டு கிளம்பிய பிறகு, மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள் இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை