இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி தடுமாற்றம்
முல்தான்,இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன் எடுத்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் க்ராவ்லி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.இதில் இங்கிலாந்து அணியினர் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இதில் க்ராவ்லி 78 ரன்னிலும், அடுத்து வந்த பென் டக்கட் அரைசதம் அடித்த நிலையில் 84 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரூட் உடன், ஹாரி புரூக் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.நிதானமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 101 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 492 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 176 ரன், ஹாரி புரூக் 141 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் இரட்டை சதமடித்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடி ஹாரி புரூக் முச்சதம் அடித்தார். ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 823 ரன்கள் எடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்துல்லா ஷபீக் ரன் எதுவும் எடுக்காமலும் , சைம் ஆயுப் 25 ரன்களும் , ஷான் மசத் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஆகா சல்மான் சிறப்பாக விளையாடினார். .இறுதியில் 4வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்தது. ஆகா சல்மான் 41 ரன்களும், அமீர் ஜமால் 27 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.