ஐ.பி.எல்: மும்பை அணி ரோகித்தை வெளியேற்றினால் இதுதான் நடக்கும் - ஹர்பஜன் சிங்

  தினத்தந்தி
ஐ.பி.எல்: மும்பை அணி ரோகித்தை வெளியேற்றினால் இதுதான் நடக்கும்  ஹர்பஜன் சிங்

மும்பை,அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோகித் சர்மாவை, வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது.இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா இந்த வருடம் மும்பை அணியிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வாங்க பஞ்சாப், டெல்லி, லக்னோ, பெங்களூரு போன்ற அணிகள் தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.இந்நிலையில், ஒருவேளை ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து வெளியேறினால் அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, மும்பை அணியால் ரோகித் சர்மா தக்கவைக்கப்படுவாரா? அல்லது ஏலத்திற்கு வருவாரா? என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஒருவேளை மெகா ஏலத்திற்கு ரோகித் சர்மா வரும் பட்சத்தில் எல்லா அணிகளுமே அவரை வாங்க போட்டி போடும். ஏனெனில் ரோகித் சர்மா ஒரு சாம்பியன் கேப்டன் என்பது மட்டுமின்றி ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன். தற்போது தனது உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் 37 வயதானாலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். என்னை பொறுத்தவரை இன்னும் சில ஆண்டுகள் ரோகித் சர்மாவால் இதே போன்ற அதிரடியை தொடர முடியும். எனவே நிச்சயம் ரோகித் சர்மா ஏலத்திற்கு வந்தால் அவரை மிகப் பெரிய தொகைக்கு வாங்க பத்து அணிகளுமே போட்டி போடும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை