லாவோஸ் ராமாயணத்தைக் கண்டுகளித்த மோடி

  தமிழ் முரசு
லாவோஸ் ராமாயணத்தைக் கண்டுகளித்த மோடி

ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காக லாவோஸ் தலைநகர் வியந்தியனுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, லாவோஸ் கலாசாரத்தின் சாயலில் படைக்கப்படும் ராமாயண நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார். பல நூற்றாண்டுகளாக இந்தியப் பாரம்பரியத்தின் கலவையாக லாவோசில் பின்பற்றப்படும் சில கலாசார வடிவங்களில் ஒன்று ‘ஃபலாக் ஃபலாம்’ அல்லது ‘ஃப்ரா லாக் ஃப்ரா ராம்’ எனும் லாவோசின் ராமாயணம். இன்றளவும் மக்களின் ரசனையை ஈர்க்கும் அந்த ராமாயணக் காட்சிகளோடு பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லாவோசில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரும் அவரை வரவேற்கத் திரண்டிருந்தனர். லுவாங் பிரபாங் நகரைச் சேர்ந்த ராயல் தியேட்டர் அமைப்பு அந்நிகழ்ச்சியைப் படைத்தது. முன்னதாக லாவோஸ் மத்திய பௌத்த அமைப்பின் மூத்த புத்த பிக்குகள் திரு மோடிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.இந்தியாவும் லாவோசும் இணைந்து மரபுடைமையை வெளிக்கொணரும் முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக லாவோசிலுள்ள வாட் பொ ஆலயத்தையும் அதனுடன் தொடர்புடைய பழம்பெரும் கட்டடங்களையும் மறுசீரமைக்கும் பணிகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஈடுபட்டு வருகிறது.

மூலக்கதை