இந்தியா: குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்க முடியாமல் தடுமாறும் பள்ளிகள்
புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கத்தால் அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க பெரிதும் திண்டாடி வருகின்றன.விலைவாசி உயர்ந்துவரும் அதேவேளையில், சத்துணவிற்கு ஒதுக்கப்படும் தொகை கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாததும் இதற்கு ஒரு காரணம் என்று ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி கூறுகிறது.நான்கு மாநிலங்களில் 21 ஆசிரியர்கள், பல்வேறு குடும்பங்கள், ஆய்வாளர்கள் எனப் பலரையும் நேரில்சந்தித்து, ராய்ட்டர்ஸ் அந்தச் செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்தியாவிலுள்ள சத்துணவுத் திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு வரையிலான 120 மில்லியன் மாணவர்கள் பயன்பெறுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், “பணவீக்கத்திற்கு ஏற்ப சத்துணவுத் திட்டத்திற்கான தொகை ஒதுக்கப்படுவதில்லை. இதனால், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறைகிறது,” என்று ‘உணவுரிமை’ இயக்கத்தைச் சேர்ந்த பொருளியல் வல்லுநரும் ஆய்வாளருமான தீபா சின்ஹா கூறினார்.சத்துணவிற்கான தானியங்களை அரசாங்கமே வழங்கினாலும் காய்கறிகள், பயறு வகைகள், பால், முட்டை போன்றவற்றுக்கு வழங்கப்படும் தொகை போதுமானதாக இல்லை எனச் சொல்லப்படுகிறது. “சில நேரங்களில் என் மகனுக்குப் பள்ளியில் வழங்கப்படும் உணவே போதுமானதாக இருக்கும். ஆனால், இப்போது வழங்கப்படும் சாம்பார் மஞ்சள் நீராகவே இருக்கிறது. அதில் அரிதாகத்தான் பருப்பைக் காண முடிகிறது,” என ஆதங்கப்பட்டார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயது ரஞ்சித் நாயக் என்ற சிறுவனின் தாயாரான ஆரத்தி, 26.சமையல் எண்ணெய், காய்கறிகள், உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை உயர்ந்துவிட்டதால் பிள்ளைகளுக்குச் சத்துணவு வழங்குவது கடினமாக இருக்கிறது என்றார் கூடிபாடா எனும் சிற்றூரிலுள்ள பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் சாபி நாயக். 2020 ஜூன் - 2024 ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பணவீக்கம் சராசரியாக 6.9 விழுக்காடாக இருந்து வந்துள்ளது. அதற்கு முந்திய நான்கு ஆண்டுகளில் அவ்விகிதம் 2.9 விழுக்காடாக இருந்தது. மேலும், காய்கறிகள், பயறு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. விலையேற்றம் இருந்தபோதும் ஒரு மாணவனின் உணவிற்கு ரூ.5.45 முதல் ரூ.8.17 வரையே வழங்கப்படுகிறது என்றும் 2022 அக்டோபர் முதல் அத்தொகை உயர்த்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் பாலில் அதிக அளவு நீர் கலக்கப்படுகிறது என்றும் பெயருக்குத்தான் அது பால் என்றும் உத்தரப் பிரதேச மாநிலம், சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பெயர் கூற விரும்பாத ஆசிரியர் ஒருவர் சொன்னார்.இந்திய மக்கள்தொகையில் 55 விழுக்காட்டினர் சத்தான உணவு உண்ணும் வசதி படைத்தவர்களாக இல்லை என்று ஐக்கிய நாட்டு உணவு, வேளாண் அமைப்பின் 2024ஆம் ஆண்டிற்கான அறிக்கை கூறுகிறது.இந்தியாவில் வருமான இடைவெளி அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. நாளொன்றுக்குக் குறைந்தது ரூ.375 ஊதியம் தரவேண்டும் என்பது 2019ஆம் ஆண்டு மத்திய அரசுக் குழு பரிந்துரைத்த தொகை எனக் குறிப்பிட்டார் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு ராஜேந்திரன் நாராயணன். அவ்வளவு ஊதியம் கிடைத்தால்தான் ஒருவர் சத்தான உணவு உண்ண முடியும். ஆனால், 2022-23 அரசாங்க ஊழியரணிக் கணக்கெடுப்பின்படி, 300 மில்லியன் பேர் அதற்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர் என்று திரு நாராயணன் சுட்டினார்.