திருவள்ளூர் ரயில் விபத்து: மனித சதியே காரணம் எனத் தகவல்

  தமிழ் முரசு
திருவள்ளூர் ரயில் விபத்து: மனித சதியே காரணம் எனத் தகவல்

சென்னை: அண்மையில் தமிழகத்தின் திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை பகுதியில் நேர்ந்த ரயில் விபத்திற்கு மனித சதிதான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கர்நாடக மாநிலத்தின் மைசூரிலிருந்து பீகார் மாநிலத்தின் தர்பங்காவிற்கு ‘பாக்மதி எக்ஸ்பிரஸ்’ என்ற விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இம்மாதம் 11ஆம் தேதி இரவு கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில்மீது அவ்வழியாகச் சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த ரயிலின் முதல் ஏழு பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், அதில் ஒரு பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டது. சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் சேதமடைந்தன. இவ்விபத்தில் பாக்மதி ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமுற்றனர். இதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து விசாரிக்க ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங். அத்துடன், தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளும் இவ்விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், ரயில்வே காவல்துறையும் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், லோக்கோ பைலட், ரயில் நிலைய அதிகாரி, தொழில்நுட்பக் குழு, சமிக்ஞைக் குழு உட்பட 15 பேரிடம் ரயில்வே காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானதாகச் சொல்லப்பட்டது. இவ்விபத்திற்குத் தொழில்நுட்பக் கோளாறு காரணமன்று என்றும் ஒரு தண்டவாளத்திலிருந்து இன்னொரு தண்டவாளம் மாறும் இடத்தில் உள்ள போல்ட்டுகளும் நட்டுகளும் கழற்றப்பட்டதால்தான் விபத்து நேர்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.அத்துடன், கவரப்பேட்டையிலும் பொன்னேரியிலும் அந்த நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை