‘மோசடியில் ஈடுபட்ட 19 போலி அழைப்பு மையங்களை ஜோகூர் காவல்துறை முடக்கியது’

  தமிழ் முரசு
‘மோசடியில் ஈடுபட்ட 19 போலி அழைப்பு மையங்களை ஜோகூர் காவல்துறை முடக்கியது’

ஜோகூர் பாரு: இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மோசடியில் ஈடுபட்ட 19 போலி அழைப்பு மையங்களை (கால் சென்டர்) முடக்கியதாக ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.அந்த மோசடி கும்பல் போலி அழைப்பு மையங்களின் மூலம் வேலை மோசடி,முதலீட்டு மோசடி கடன் மோசடி உட்பட அனைத்து வகையான வணிக குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜோகூர் காவல்துறை தலைமையகத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) நடந்த மாதாந்தரக் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 156 வெளிநாட்டவர் உட்பட உள்ளூர்வாசிகள் சிலரையும் அதிகாரிகள் கைது செய்திருப்பதாக அவர் சொன்னார். “மோசடியில் ஈடுபட்ட 19 போலி அழைப்பு மையங்களின்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவற்றில் ஏழு மையங்கள்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டன,” என்றார் அவர்.மேலும், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்கு இரையாகாமல் விழிப்புடன் இருக்கக் காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை