இந்தியா - கனடா உறவு மேலும் மோசமடைகிறது

  தமிழ் முரசு
இந்தியா  கனடா உறவு மேலும் மோசமடைகிறது

புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாதான் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்தியா, கனடா இடையேயான உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா ஆதாரம் கேட்டது. இருப்பினும், ஆதாரம் வழங்க மறுத்த கனடா, தொடர்ந்து இந்திய அரசின்மீது குற்றம் சாட்டி வந்தது.இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு, இந்தியா மீதான குற்றச்சாட்டுக்குத் தங்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று கனடா கூறியிருக்கிறது. கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் தனது அரசு வெறும் ஊகத் தகவலை மட்டுமே பகிர்ந்துகொண்டதாகவும் அதற்கு ஆதாரம் எதுவும் தம்மிடம் இல்லை என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை ஒப்புக்கொண்டார்.வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்து விசாரிக்கும் ஆணையம் நடத்தி வரும் விசாரணையில் முன்னிலையான ட்ரூடோ இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், ஹர்தீப் சிங் கொலையில் குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன்பே இந்தியாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார்.இருப்பினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு குறித்து விமர்சிப்பவர்களின் வாயை அடைக்கும் செயலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். இதை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது.இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவுகளில் இந்த ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தை ஏற்படுத்திய சேதத்துக்குக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு,” என்று தெரிவித்துள்ளது.இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கனடிய அரசு, ஹர்தீப் சிங் கொலையைத் தொடர்புப்படுத்தி, கனடாவுக்கான இந்தியத் தூதர் உள்ளிட்ட 6 தூதரக அதிகாரிகளைக் கனடா வெளியேற்றியதாகத் தெரிவித்தது. கனடாவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி தரும் வகையில், இந்தியாவும் கனடிய தூதரக அதிகாரிகள் ஆறு பேரை வெளியேற்றியுள்ளது. மேலும் கனடாவுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தாங்கள் மீட்டுக்கொண்டதாகக் கூறியுள்ளது. கனடாவில் படித்து வரும், படிக்க விரும்பும் மாணவர்களும், படிப்பை முடித்ததும் அங்கு வேலையைத் தொடர்வதற்கு விரும்புபவர்களும், இந்தியர்களுக்கு விசா அனுமதி கொடுப்பதில் கனடா கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.அதேவேளையில், இருநாடுகளுக்கும் இடையேயான விரிசலால், விசா கொள்கைகள் இந்தியர்களைப் பாதிக்க வாய்ப்பில்லை. இந்தப் பிரச்சினைகள் குடியேற்றப் பிரச்சினைகளில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை