மலேசியப் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதை அரசியலாக்க வேண்டாம் என வலியுறுத்து

  தமிழ் முரசு
மலேசியப் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதை அரசியலாக்க வேண்டாம் என வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவிலுள்ள தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ், சீனம் கற்பிப்பதை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மலேசிய இஸ்லாமிய கட்சித் (பாஸ்) தலைவருக்குக் கண்டனம் எழுந்துள்ளது. அரசாங்கம் தனது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மாறாக தேசிய வகை (national-type) பள்ளி ஆசிரியர்கள் மலேசியாவின் தேசிய மொழியான மலாயில் தங்களின் சொல்லாண்மையை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும் பாஸ் கட்சியின் மகளிரணித் துணைத் தலைவி சலாமியா நோர் அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது இக்கருத்துக்கு கல்விக்கான பெற்றோர் செயற்குழு (பேஜ்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சலாமியா நோர் வேண்டுமென்றே இதனை அரசியலாக்குகிறார் என்றும் தங்கள் பொறுப்பின்கீழ் வராத பிற விவகாரங்களில் தலையிடுவதை பாஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பேஜ் அமைப்பின் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹிம் வலியுறுத்தி இருக்கிறார். அத்துடன், தான் ஆளும் மாநிலங்களில் கல்வித் தேர்ச்சியை மேம்படுத்தவும் பள்ளிகளிலிருந்து இடைநிற்போர் விகிதத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் பாஸ் கட்சி கவனம் செலுத்தலாம் என்றும் திருவாட்டி நூர் அஸிமா அறிவுறுத்தியுள்ளார். “ஆசிரியர்களும் மாணவர்களும் அன்றாடம் மலாய் மொழியில் பேசினாலும் கிளந்தான் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் மலாய் மொழித் தேர்ச்சி தேசிய சராசரியைவிடக் குறைவாக உள்ளது,” என்று அவர் சுட்டினார். இதனிடையே, தேசிய ஆசிரியப் பணிச் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஃபௌசி சிங்கோனும் சலாமியாவின் ஆலோசனையைச் சாடியிருக்கிறார். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் தமிழ், சீன மொழிகளுக்கான பயிற்சித் திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் அனுமதி வழங்கி இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்திருந்தார். தேசிய வகை தமிழ், சீனப் பள்ளிகளுக்குப் போதுமான அளவில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருப்பதை உறுதிசெய்வதே அத்திட்டத்தின் நோக்கம்.

மூலக்கதை