பொருளியலைப் பெருக்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் மலேசியா முழு முயற்சி

  தமிழ் முரசு
பொருளியலைப் பெருக்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் மலேசியா முழு முயற்சி

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிம் சாதனையளவாக 421 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வரவுசெலவு திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்தார்.நாட்டின் பொருளியலை பெருக்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் இந்த வரவுசெலவு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக வாய்ப்புகள், பொதுமக்களின் நலன், விலைவாசி கட்டுக்குள் இருப்பது உள்ளிட்டவை மீதும் அவர் கவனம் செலுத்தினார். இந்த வரவுசெலவு திட்டம் மூலம் பல வேலை வாய்ப்புகள் உருவாகும், நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள் மீண்டு வருவார்கள் என்று திரு அன்வார் தெரிவித்தார்.அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மலேசியாவை முன்னேற்றும் என்றும் ஆசியாவில் பொருளியல் சக்தியாக அது மாறக்கூடும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.இம்முறை மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட நன்றாக வளர்ந்துள்ளது, முதலீடுகள் கிடைத்துள்ளன, மிக முக்கியமாக ரிங்கிட்டின் மதிப்பு கூடியுள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது என்று திரு அன்வார் கூறினார். 2024ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8 விழுக்காட்டிற்கும் 5.3 விழுக்காட்டிற்கும் இடையில் முன்னுரைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அந்தக் கணிப்பு 4.0 விழுக்காட்டிற்கும் 5.0 விழுக்காட்டிற்கும் இடையில்தான் இருந்தது.அடுத்த ஆண்டு அது 5.5 விழுக்காடு வரை வளர்ச்சி பெறும் என்று திரு அன்வார் நம்பிக்கை தெரிவித்தார். வரவுசெலவு திட்டத்தில் 335 பில்லியன் ரிங்கிட் நடைமுறைச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு 86 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் 2023ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.6 விழுக்காடு மட்டுந்தான் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடுகையில் அது குறைவு என்றார் அன்வார். கடந்த ஆண்டு 80 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சலுகைகள்,மானியங்கள் கொடுத்து உதவியதை திரு அன்வார் நினைவுகூர்ந்தார்.மேலும், இச்சலுகைகள் அடுத்த ஆண்டு குறைக்கப்படும், தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை