மீண்டும் பார்முக்கு திரும்ப பாபர் அசாமுக்கு இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்

  தினத்தந்தி
மீண்டும் பார்முக்கு திரும்ப பாபர் அசாமுக்கு இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்

புதுடெல்லி, சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை முன்னிட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரிலும் அவருடைய தலைமையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அவருடைய கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஏனெனில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதன்மை வீரராக போற்றப்படும் அவர் சமீப காலமாகவே கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.அதன் காரணமாக தற்போது நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் கழற்றி விடப்பட்டுள்ளார். அவரை கழற்றிவிட்டு அடுத்த போட்டியிலேயே பாகிஸ்தான் 3 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது.இந்நிலையில் பாபர் அசாம் உள்ளூரில் கிரிக்கெட்டில் விளையாடினால்தான் பார்முவுக்கு திரும்ப முடியும் என்று அவருக்கு இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய டெக்னிக்கில் எந்த தவறும் இல்லை என்று சேவாக் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பாபர் அசாம் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். தனது பிட்னசில் கவனம் செலுத்த வேண்டிய அவர் தன்னுடைய குடும்பத்துடன் கொஞ்சம் நேரம் செலவிட்டு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மனதளவில் வலுவாகவும் உடலளவில் பிட்டாகவும் வர வேண்டும். அவர் மீதான எதிர்பார்ப்புகள் தற்போது குறைந்துள்ளன. கேப்டன்ஷிப் பொறுப்பையும் அவர் ராஜினாமா செய்தார். அது அவருடைய டெக்னிக்கை விட மனதளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எனவே அவர் மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். உண்மையில் அவர் திறமையான வீரர். அவரைப் போன்ற வீரர்கள் வேகமாக மீண்டும் திரும்பி வருவார்கள்" என்று கூறினார்.

மூலக்கதை