சுவாசத் தொற்றிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி

  தமிழ் முரசு
சுவாசத் தொற்றிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி

சிங்கப்பூரில் நவம்பர் 1ஆம் தேதி முதல், பிள்ளைகளுக்குச் சுவாசத் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் தடுப்பூசியைக் கர்ப்பிணிகள் போட்டுக்கொள்ளலாம். ‘அப்ரிஸ்வோ’ (Abrysvo) தடுப்பூசி இருமல், காய்ச்சல் முதற்கொண்டு நிமோனியா போன்ற தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் சுவாசத் தொற்று ஏற்படாமல் சிசுக்களைப் பாதுகாக்கும்.பிள்ளைகளுக்கு ஆறு மாதம் ஆகும்வரை இத்தகைய பாதுகாப்பை அந்தத் தடுப்பூசி வழங்கும்.32 முதல் 36 வாரக் கர்ப்பிணிகள் இதைப் போட்டுக்கொள்ளலாம். வயிற்றில் வளரும் சிசுக்களுக்கு அது சென்றுசேரும். ‘அப்ரிஸ்வோ’ தடுப்பூசியை ஃபைஸர் நிறுவனம் தயாரிக்கிறது. சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் கடந்த ஜூலை 23ஆம் தேதி அந்த மருந்தைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.சிங்கப்பூரில் கர்ப்பிணிகளுக்குப் போட ஒப்புதல் வழங்கப்பட்ட இத்தகைய முதல் தடுப்பூசி அதுவாகும்.பொதுநல மருத்துவர்களின் மருந்தகங்கள், கேகே மகளிர், சிறார் மருத்துவமனை (கேகேஎச்) உள்ளிட்ட மருத்துவமனைகளில் அது கிடைக்கும்.தடுப்பூசியின் விலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த கேகேஎச், அது கட்டுப்படியான விலையில் இருக்கும் என்று மட்டும் கூறியது.கர்ப்பிணிகளின் கையின் மேற்பகுதியில் ஒருமுறை மட்டும் செலுத்தப்படும் அந்தத் தடுப்பூசியைக் கர்ப்பிணிகள் போட்டுக்கொள்ளுமாறு வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.சிசுக்கள் சுவாசத் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள நேரிடும். இத்தகைய சூழலைத் தவிர்க்க ‘அப்ரிஸ்வோ’ தடுப்பூசி உதவும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.தடுப்பூசி வயிற்றில் வளரும் சிசுக்களுக்கு மட்டுமன்றி கர்ப்பிணிகளுக்கும் சுவாசத் தொற்றுக்கு எதிரான தடுப்பாற்றலை அளிக்கும் என்று அவர்கள் கூறினர்.சோதனைக் கட்டத்தில் ‘அப்ரிஸ்வோ’ தடுப்பூசி 91.1 விழுக்காட்டுச் செயல்திறனுடன் இருப்பது தெரியவந்துள்ளது. பிள்ளைகளுக்கான கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தில் இந்த மருந்து சேர்க்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது. தடுப்பு மருந்தின் செயல்திறனைத் தொடர்ந்து கண்காணித்து, காலப்போக்கில் அதனால் தீவிர பின்விளைவுகள் ஏதும் இருக்குமா என்பதை ஆய்வுசெய்யவிருப்பதாக அமைச்சு சொன்னது.

மூலக்கதை