‘விஇபி கட்டண வசூல் 2024ல் 100 மி. ரிங்கிட்டைத் தாண்டும்’

  தமிழ் முரசு
‘விஇபி கட்டண வசூல் 2024ல் 100 மி. ரிங்கிட்டைத் தாண்டும்’

கோலாலம்பூர்: வாகன நுழைவு அனுமதியை (விஇபி) நடைமுறைப்படுத்துவதன் மூலம் கட்டண வசூல் 2024ஆம் ஆண்டில் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.ஜோகூரில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் அமைச்சர். “2023ல் விஇபி மூலம் கிடைக்கப்பெற்ற வசூல் 91,037,040 ரிங்கிட்.சிங்கப்பூரில் இருந்து ஜோகூருக்குள் இந்த ஆண்டு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வசூல் 100 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என்று மதிப்பிடுகிறேன்,” என்று மலேசிய நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் திரு லோக். அரசாங்கத்தால் சேகரிக்கப்படும் வருமானம் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கு அனுப்பப்படுகிறது என்றார். “விஇபிக்காக சேகரிக்கப்படும் ஒவ்வொரு 20 ரிங்கிட்டிலிருந்து 5 ரிங்கிட் ஜோகூர் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகிறது.“நாங்கள் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுப் போக்குவரத்து நோக்கங்களுக்காக இந்த வசூல் சேகரிப்பு ஜோகூர் மாநிலத்துக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வோம்,” என்றும் திரு லோக் கூறினார்.

மூலக்கதை