உடல்பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள சீனா நடவடிக்கை

  தமிழ் முரசு
உடல்பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள சீனா நடவடிக்கை

பெய்ஜிங்: சீனாவில் உள்ள பெரியவர்களில் 50 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோரின் உடல் எடை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உடல் பருமன் பிரச்சினை அதிகமாக இருப்பதாகவும் இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியது.இப்பிரச்சினையை எதிர்கொள்ளும் நோக்குடன் உடல் பருமன் பிரச்சினையை அடையாளம் காண்பது, அதற்கு சிகிச்சை அளிப்பது ஆகியவை தொடர்பாக ஆணையம் முதல்முறையாக வழிகாட்டி நெறிமுறை ஒன்றை அக்டோபர் 17ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது.சீனாவில் உடல் எடை அதிகமாக இருப்போர், உடல் பருமனாக இருப்போர் ஆகியோரின் விகிதம் 2030ஆம் ஆண்டுக்குள் 65.3 விழுக்காட்டை எட்டக்கூடும் என்று ஆணையம் தெரிவித்தது.“சீனாவில் உடல் பருமன் பிரச்சினை மிகப் பெரிதாக உள்ளது. சீனாவில் பதிவாகும் மரணம், உடற்குறைக்குக் காரணமாக இருக்கும் நோய்களின் பட்டியலில் அது ஆறாவது இடத்தில் உள்ளது,” என்று ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆணையம் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறை வாயிலாக மருத்துவ ஊட்டச்சத்து, அறுவை சிகிச்சை, நடத்தை மற்றும் உளவியல் ரீதியிலான சிகிச்சை, உடற்பயிற்சி ஆகியவை மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.சீனாவில் உள்ள தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஜூலை மாதத்தில் சுகாதார வழிகாட்டி நெறிமுறைகள் விநியோகம் செய்யப்பட்டன.மருத்துவப் பரிசோதனை, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணரைப் பணியமர்த்துவது, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்துவது ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன.

மூலக்கதை