நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  லங்காசிறி நியூஸ்

இலங்கை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளரும் “Api Sri Lanka” தேசிய அமைப்பின் அழைப்பாளருமான எச்.எம் பிரியந்த ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, வேட்புமனுக்களை ஏற்கும் காலம் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 11 வரை அறிவிக்கப்பட்டது என்று மனுதாரர் கோரியுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி, ஐந்து வாரங்களுக்குக் குறையாமலும், வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி திட்டமிடப்பட வேண்டும் என மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதன்படி, அக்டோபர் 11 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தவுடன், ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதி முடிவடையும் என்றும், நவம்பர் 29 ஆம் திகதி ஏழு வார காலம் நிறைவடையும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது சட்டக் காலத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும், எனவே அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டவிரோதமானது எனவும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் குற்றச் செயல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த முடிவின் மூலம் மக்களின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனம் மீறப்படுவதாக உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.மேலும், இந்த தொடர்புடைய தீர்ப்பை சீரமைக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை