பண்டிகை காலம்; 164 சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு

  தினத்தந்தி
பண்டிகை காலம்; 164 சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு

புதுடெல்லி,இந்தியா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இருளை, ஒளி வெற்றி கொண்ட மற்றும் தீமையை நன்மை வெற்றி பெற்றதற்கான அடையாளமாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கடவுள் மகாலட்சுமியிடம் செல்வ வளம் வேண்டி வழிபாடு செய்வதுடன், சுவையான இனிப்புகளை பகிர்ந்து கொள்வது மற்றும் பரிசுகளை பரிமாறி கொள்வது ஆகியவை இந்த கொண்டாட்டங்களில் இடம் பெறும்.இதேபோன்று, மகிழ்ச்சியான சூழலை மேம்படுத்தி, ஒன்றிணைந்து இருக்கும் தருணங்களை உருவாக்கி, ஆண்டு முழுவதும் ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான மனவுறுதியை வளர்த்தெடுக்கும் வகையில், பல வண்ணங்களை வெளியிடும் பட்டாசுகளை இரவில் வெடித்து மகிழ்வதும் வழக்கம். வீடுகளில் வண்ணமய ரங்கோலி கோலங்களை வரைந்தும், விளக்குகளை ஏற்றியும் குடும்பத்தினர் மகிழ்வார்கள்.இந்நிலையில், சத் மற்றும் தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடும் வகையில், 164 சிறப்பு ரெயில்களை இயக்குவது என இந்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதன்படி, இந்த ரெயில்கள் சரியான நேரத்தில் மக்களை இன்று அவர்களுடைய இடங்களுக்கு கொண்டு சேர்க்கும்.இதற்கான விரிவான ஏற்பாடுகளை ரெயில்வே செய்துள்ளது என ரெயில்வே வாரிய தகவல் மற்றும் விளம்பர மேலாண் இயக்குநர் திலீப் குமார் கூறியுள்ளார். இந்த ரெயில்கள் செகந்திராபாத், ஆமதாபாத், கோட்டயம், உஜ்ஜைன், போபால், புதுடெல்லி, நாக்பூர் போன்ற நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்கு இன்று இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.இந்த கூடுதல் ரெயில்களை கொண்டு, 7 ஆயிரம் கூடுதல் பயணங்கள் நாடு முழுவதம் மேற்கொள்ளப்படும். ரெயில் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் குழு, பயணிகளுக்கு சவுகரிய குறைவு ஏற்படாத வகையில் அதனை உறுதி செய்வார்கள். இதுதவிர, ரெயில்வே போலீஸ் படை, வர்த்தக மற்றும் பிற சுய உதவி குழுக்களும் பயணிகளின் வசதிக்காக இந்த பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.கூட்ட நெரிசல் ஏற்பட சாத்தியமுள்ள ரெயில் நிலையங்களில், பயணிகள் அமர்வதற்கு மற்றும் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பயணிகளுக்கு மகிழ்ச்சியான பயணம் உறுதி செய்யப்படுவதற்கான சாத்தியப்பட்ட அனைத்து முயற்சிகளையும் இந்திய ரெயில்வே எடுத்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை