ரத்தன் டாடாவின் எளிமையான குணம்: அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி
புதுடெல்லி,நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார். எனினும், அவருடைய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி அவரிடம் நெருக்கமாகப் பழகிய பிரமுகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் அவரைப் பற்றிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.அமிதாப்பச்சன் கூறுகையில், "நான் ஒருமுறை ரத்தன் டாடாவுடன் லண்டனுக்கு விமானத்தில் சென்றேன். இருவரும் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கினோம். அப்போது, ரத்தன் டாடா அவரது ஊழியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை உணர்ந்தார். இதையடுத்து, அவர்களை அழைக்க போன் பூத்திற்கு சென்றார். ஆனால் அதற்கும் அவரிடம் பணம் இல்லை. அந்தச் சமயத்தில் அவர் திரும்பிவந்து என்னிடம், 'அமிதாப், நான் உங்களிடம் கொஞ்சம் கடன் வாங்கலாமா? போன் செய்ய என்னிடம் பணம் இல்லை' எனக் கேட்டார். அவர், இதைச் சொன்னதைக் கேட்டு என்னால் நம்ப முடியவில்லை. அவரது வேண்டுகோளைக் கேட்டு நானே வியந்துபோனேன். பின்னர், என்னிடமிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.