ரசிகரின் கைப்பேசியை உடைத்த ரொனால்டோ (காணொளி)

  தமிழ் முரசு
ரசிகரின் கைப்பேசியை உடைத்த ரொனால்டோ (காணொளி)

ரியாத்: இடைநிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தின்போது கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியோனா ரொனால்டோ கோட்டைவிட்டதால், அவருடைய அல் நசர் குழு 1-0 என்ற கோல் கணக்கில் அல் தாவோன் குழுவிடம் தோற்று, சவூதி அரசர் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறியது.போர்ச்சுகல் காற்பந்து அணித்தலைவரும் முன்னணி ஆட்டக்காரருமான ரொனால்டோ கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குமுன் அல் நசர் குழுவில் இணைந்தார். ஆயினும், அக்குழு சார்பில் இன்னும் அவர் ஒரு கிண்ணம்கூட வென்றதில்லை. இந்நிலையில், புதன்கிழமை நடந்த காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தில், ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருந்தபோது அல் தாவோன் கோலடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தைச் சமன்படுத்த கடைசி நேரத்தில் அல் நசர் குழுவிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆயினும், அந்த பெனால்டி வாய்ப்பில் ரொனால்டோ உதைத்த பந்து கம்பத்திற்கு மேலே சென்றதோடு, அல் நசரின் காலிறுதி வாய்ப்பையும் பறிப்பதாக அமைந்தது.இதற்குமுன் 18 முறை அல் நசர் சார்பில் பெனால்டி வாய்ப்பைக் கையாண்ட ரொனால்டோ, அத்தனை முறையும் கோலடித்திருந்தார். இதனிடையே, ரொனால்டோவின் பெனால்டியை எடுத்தபோது, அதனைத் தம் கைப்பேசியில் பதிவுசெய்தபடி இருந்தார் இளம் ரசிகர் ஒருவர். இந்நிலையில், கம்பத்திற்கு மேலே சென்ற பந்து, நேராக அந்த ரசிகரின் கைப்பேசிமீது பட, பந்தோடு அதுவும் பறந்து சென்று விழுந்தது. இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது. ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியபோதும் தங்களால் வெற்றிபெற முடியாமல் போனதாகக் குறிப்பிட்டார் அல் நசர் நிர்வாகி ஸ்டெஃபானோ பியோலி. “அரசர் கிண்ணத்திலிருந்து வெளியேறியது வருத்தம் தருகிறது. ஆயினும், இன்னும் இரு கிண்ணங்கள் உள்ளன. சிறப்பாக விளையாடி, அவற்றைக் கைப்பற்ற முயல்வோம்,” என்றார் அவர்.

மூலக்கதை