புதுச் சுதந்திரம் பெற்ற தீபாவளி
ஆண்டுதோறும் ரூ.6,000 கோடிக்கு விற்பனையான சிவகாசி பட்டாசுகளின் விற்பனை அளவு, கடந்த சில ஆண்டுகளில் சரிபாதியாக குறைந்துவிட்டது. தமிழகத்தின் ‘தீபாவளித் தலைநகர்’ எனப் பெயர் பெற்ற சென்னை தியாகராய நகரில், கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வந்த தீபாவளி விற்பனை தற்போது 30 விழுக்காடு அளவு குறைந்துவிட்டது.ஆனால், இப்படிப்பட்ட புலம்பல்களுக்கு மத்தியிலும், மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை மட்டுமே காண முடிகிறது. இது என்ன முரண் என்ற கேள்வி எழுவது இயல்புதான்.ஒரு காலத்தில் சிவகாசிக்கு நேரடியாகச் சென்று பட்டாசு வாங்கினால் மட்டுமே மலிவான விலையில் கிடைக்கும் என்ற நிலை மாறிவிட்டது. ‘லிட்டில் சிவகாசி’யாக மாறிவிட்ட பகுதிகள்சென்னை, திருச்சி, மதுரை என அனைத்து முக்கிய நகரங்களிலுமே ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதி ‘லிட்டில் சிவகாசி’ என்பது போல் காலப்போக்கில் மாறிவிட்டன. அங்கு சென்றால் அனைத்துரக பட்டாசுகளும் சிவகாசியில் கிடைக்கும் அதே விலைக்கு விற்கப்படும். இதேபோல் அனைத்து நகரங்களிலும் சென்னையின் பிரபல துணி, நகைக்கடைகளின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. “அவ்வளவு ஏன், சென்னையிலும்கூட பல்வேறு முக்கியமான பகுதிகளில் அத்தகைய கிளைகளைக் காண முடியும். பிறகு அனைவரும் எதற்காக தி.நகருக்கு வர வேண்டும்? “மேலும், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருப்பதால் சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக அதிகரித்துவிட்டது,” என்கிறார் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த திரு.ராமகிருஷ்ணன் (56 வயது).சிவகாசி, தி.நகர் வியாபாரிக்கு லாபத்தில்தான் 30 விழுக்காடு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது இவரது வாதமாக உள்ளது. தொலைக்காட்சிக்குள் முடங்கிய பண்டிகை“ஒரு வகையில், தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என, நீதிமன்றம் என்றைக்கு உத்தரவிட்டதோ, அன்று முதல் தீபாவளிப் பண்டிகை தனது சுதந்திரத்தைக் கொண்டாடி வருகிறது.“வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த தீபாவளி தற்போது சுதந்திரமாக உலா வருகிறது,” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த திருமதி.சௌமியா.பத்து ஆண்டுகளுக்கு முன்பும் இப்போதும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை.தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை அதிகமான பின்னர், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்ப்பதுதான் உண்மையான தீபாவளி கொண்டாட்டம் என முடிவெடுத்திருந்த காலம் அது. இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம், மேற்கொண்டு வெடித்தால் அபராதம் என்ற அறிவிப்பு, குறைந்தபட்சம் மக்களை வீட்டுச் சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சமூக ஊடகங்களில் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்பதால், அனைவருக்கும் நேரம் மிச்சமாகி உள்ளது.முகம் பார்த்துப் பேசும் மக்கள்முன்புபோல் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியே செல்கிறார்கள். முகம் பார்த்துப் பேசுகிறார்கள். சுதந்திரம் பெற்றது முதல் மின்சாரம் இல்லாத கிராமம், அடிப்படை வசதிகள் இல்லாத சிற்றூர் என்று தேர்தல் சமயத்தில் வரும் செய்திகளைப்போல், தீபாவளி கொண்டாடாத கிராமம், பட்டாசு சத்தம் கேட்காத சிற்றூர் என ஒவ்வோர் ஆண்டும் தீபாவளித் தகவல்களும் ஊடகங்களில் வெளிவரத்தான் செய்கின்றன.அனைத்தையும் கடந்து மக்கள் பண்டிகையை அதன் சிறப்புக்கு ஏற்ப கொண்டாடத்தான் செய்கிறார்கள். மக்களைக் கவர்ந்துள்ள ‘டிரோன் வெடி’ காலத்துக்கு ஏற்ப தீபாவளிச் சந்தையில் விற்கப்படும் பட்டாசுகளும் துணி வகைகளும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு குவிகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டில் கவர்ச்சிகரமான வெடி என்றால் அது ’டிரோன் வெடி’தான்.ஈமு கோழி வான வெடி, வாத்து வெடி, லாலிபாப் வெடி எனப் பெயரைக் கேட்டதும் மனதைக் கவரும் பல வெடிகளும் உள்ளன. பல்வேறு துணி வகைகளும் சந்தையில் அறிமுகமாகி உள்ளன.தஞ்சையைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தார் தூய்மைப் பணியாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்றுள்ளனர். அவர்களை வாகனத்தில் ஏற்றி துணிக்கடைக்கு அழைத்துச் சென்று விரும்பிய துணி மணிகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு தூய்மைப் பணியாளரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே புத்தாடைகள் பரிசளிக்கப்பட்டன. இவ்வாறு தனி நபர்களும் தொண்டு நிறுவனத்தாரும் தங்களால் இயன்ற வகையில் தீபாவளியைக் கொண்டாடுவதில் சிரமங்கள் எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.12 நாடுகளில் தீபாவளிக்கு அரசு விடுமுறைஇந்தியா உட்பட 12 நாடுகளில் தீபாவளிப்பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு அதிபர் ஆண்டுதோறும் பங்கேற்கிறார்.தீபாவளிப் பண்டிகை தன் தனித்துவத்தை இழக்கவில்லை. மாறாக சுருங்கிக்கிடந்த கொண்டாட்டங்கள் மீண்டும் விரிவடைந்துள்ளன.சுதந்திரம் பெற்ற தீபாவளி சொல்லும் செய்தி? “வேறென்ன... அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்”.