2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த விண்ணப்பம்
புதுடெல்லி: 2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கேட்டு, இந்திய ஒலிம்பிக் சங்கம், அனைத்துலக ஒலிம்பிக் குழுவிடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.ஒலிம்பிக் போட்டி என்பது உலக நாடுகள் பங்கேற்கும் மிகப்பெரிய விளையாட்டு விழா. இது, ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.தற்போது, 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரிஸில் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, 2028ஆம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.மேலும் 2032ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஒலிம்பிக் நிகழ்வுகள் நடைபெறும். இந்தியா 2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது.முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது. இது 140 கோடி இந்தியர்களின் கனவு,” எனக் கூறியிருந்தார்.இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் அனைத்துலகக் குழுவிடம், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது.இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்குத் தகுதியான நகரங்கள், அவற்றில் உள்ள வசதிகள், முறைப்படி தேவையான தகவல்கள் அனைத்தும் அந்த விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ளன.