மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டி

  தமிழ் முரசு
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டி

மும்பை: மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே அண்டை மாநிலங்களில் உள்ள தேர்தல்களில் போட்டியிடுவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி நிறைவு பெற்றது. அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. ஆளும் கூட்டணி அரசான பாஜக - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலைச் சந்திக்கிறது. அதேபோல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளன. பிரதமர் மோடி 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அங்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.இதற்கிடையே, மகாராஷ்டிரத்தில் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 37 தொகுதிகளைச் சேர்ந்த 40 நிர்வாகிகளைப் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) நீக்கியுள்ளது. தேர்தலில் மஹா யுதி கூட்டணியில் போட்டியிடும் பாஜக 149 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை நாக்பூரில் தொடங்கிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சம்விதன் சம்மேளனம் எனும் அரசியலமைப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார்.இத்தேர்தலில் நாக்பூர் முக்கியமான தொகுதி. ஏனெனில் இது பாஜகவின் ஆர்எஸ்எஸ்ஸின் தலைமையகம் மட்டுமல்லாமல், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு புத்த மதத்திற்கு மாறிய இடமும் ஆகும். இந்நிலையில், இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எங்காவது ஓரிடத்தில் நிறுத்தித்தானே ஆகவேண்டும் என்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் 83 வயது சரத் பவார் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிய இன்னும் 18 மாதங்கள் உள்ளன. இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் கடந்த 1999ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார். மகாராஷ்டிர அரசியலில் நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர். மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள பாரமதி சரத்பவாரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகும். அவர் எம்பி, எம்எல்ஏ என இந்தத் தொகுதியிலிருந்து 14 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்கு முறை முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.  அத்தொகுதியில் இம்முறை பாஜக கூட்டணி சார்பாக அஜித் பவார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அஜித் பவாரின் சகோதரர் மகன் யுகேந்திர பவார், சரத்சந்திர பவார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர்.

மூலக்கதை