அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்: டி.டி.வி. தினகரன் கண்டனம்
சென்னை,அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-அரசு மருத்துவமனைகளில் செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான பொது கலந்தாய்வு வரும் 11, 12 ஆகிய தேதிகளில் அந்தந்த சுகாதார மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான காலிப்பணியிடங்கள் கலந்தாய்வுக்கு முன்பாகவே லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலமாக புதியதாக பணிக்கு சேர்ந்தவர்கள் 6 லட்ச ரூபாய் முதல் 12 லட்சம் வரை பணத்தை லஞ்சமாக கொடுத்து பணியிடங்களை முன்கூட்டியே பெற்றுவிட்டதால், பணவசதி இல்லாமல் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றிவரும் செவிலியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்கள் எத்தனை? எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளன? என்பது குறித்து முழுமையான விவரங்களை வெளியிடாமல் நடைபெறும் கலந்தாய்வு எப்படி நேர்மையாக நடைபெறும்? என்ற கேள்வியை செவிலியர்கள் எழுப்பியுள்ளனர்.ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் நிலவும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறை, தற்போது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வையும் வெளிப்படைத்தன்மையாக நடத்த மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.எனவே, பொது கலந்தாய்வுக்கு முன்பாகவே லஞ்சம் பெற்றுக் கொண்டு செவிலியர் பணியிடங்களை ஒதுக்கியிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் வெளிப்படைத்தன்மையோடு பொது கலந்தாய்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.