அணித்தலைவரின் செயலால் காட்டம்; எல்லைக்கோட்டிற்கு வெளியே நின்ற கிரிக்கெட் வீரர்
பிரிட்ஜ்டவுன்: அணித்தலைவரின் முடிவால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆட்டத்தின் இடையிலேயே திடலைவிட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசஃபிற்கு இரண்டு ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இம்மாதம் 6ஆம் தேதி பிரிட்ஜ்டவுனில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. அப்போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி பந்தடித்தபோது நான்காவது ஓவரை வீசிய ஜோசஃப்பிற்கு அணித்தலைவர் ஷே ஹோப் களக்காப்பிற்காக வீரர்களை நிறுத்தியவிதம் பிடிக்கவில்லை. அந்த ஓவரில் இங்கிலாந்து ஜோ காக்சை அவர் ஆட்டமிழக்கச் செய்தபோதும் அதனைக் கொண்டாடவில்லை. அந்த ஓவர் முடிந்ததும் அவர் திடலைவிட்டு வெளியேறி, எல்லைக்கோட்டிற்கு வெளியே நின்றார். இதனால், ஐந்தாவது ஓவரின்போது திடலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பத்துப் பேர் மட்டுமே இருந்தனர். அத்துடன், தமது பந்துவீச்சின்போது சக வீரர்கள் இருமுறை களக்காப்பில் சோடைபோனதால் ஜோசஃப் மீண்டும் திடலைவிட்டு வெளியேறினார். இதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பின்னர் தமது செயலுக்காக வருத்தம் தெரிவித்த ஜோசஃப், அதற்காக ஷே ஹோப், சக வீரர்கள், அணி நிர்வாகம், ரசிகர்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.