மான்செஸ்டர் யுனைடெட்டில் சீறிப்பாயும் முன்கள வீரர் இல்லை: தற்காலிக நிர்வாகி நிசல்ரோய்
லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் அணியில் சீறிப்பாயும் முன்கள வீரர் இல்லை என்று அந்த அணியின் தற்காலிக நிர்வாகி ரூட் வான் நிசல்ரோய் தெரிவித்துள்ளார்.இருப்பினும் ரஸ்மஸ் ஹோய்லுன்ட், ஜோசுவா சிர்க்சி உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான முன்கள வீரர்களாக மாறி வருவதால் விரைவில் அவர்கள் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கோல் மழை பொழிவார்கள் என்று நிசல்ரோய் கூறினார். இப்பருவ இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் குறைந்த கோல்கள் அடித்த அணிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் ஒன்று. 10 ஆட்டங்களில் 9 கோல்கள் மட்டுமே அது அடித்துள்ளது. இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணி லெஸ்டர் சிட்டியை எதிர்கொள்கிறது. ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) இரவு 10 மணிக்கு ஓல்ட் டிராஃபர்ட் அரங்கத்தில் நடக்கிறது. கடந்த வாரம் நிசல்ரோய் தலைமையில் ‘லீக்’ கிண்ணப் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை யுனைடெட் வீழ்த்தியது. அதனால் இந்த ஆட்டத்திலும் யுனைடெட் வெற்றிபெற முயற்சி செய்யக்கூடும். 39 வயது ரூபன் நவம்பர் 11ஆம் தேதி யுனைடெட் குழுவின் நிர்வாகியாக பொறுப்பேற்கிறார். அதனால் நிசல்ரோய் தலைமையில் யுனைடெட் விளையாடும் கடைசி ஆட்டம் இது.இரண்டு வாரங்களுக்கு முன் நிர்வாகி பொறுப்பில் இருந்து எரிக் டென் ஹாக், பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்காலிக நிர்வாகியாக நிசல்ரோய் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் யுனைடெட் மூன்று ஆட்டங்களில் விளையாடி இரண்டில் வெற்றி ஒன்றில் சமநிலையை பெற்றது.சனிக்கிழமை (நவம்பர் 9) மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் யுனைடெட் 12 புள்ளிகளுடன் 13வது இடத்தில் உள்ளது.