உலகில் எந்த சக்தியாலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்புத் தகுதி வழங்கமுடியாது: மோடி

  தமிழ் முரசு
உலகில் எந்த சக்தியாலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்புத் தகுதி வழங்கமுடியாது: மோடி

புனே: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலம், துலேவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுண்ணி கட்சியாக மாறிவிட்ட காங்கிரஸ், ஊன்றுகோலை நம்பியே உள்ளது,” என்று கடுமையாக விமா்சித்தாா். காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் பாகிஸ்தானின் மொழியில் பேசி வருவதாகவும் குறிப்பிட்டவர், “ஜம்மு-காஷ்மீரில் இருந்து அரசமைப்புச் சட்டத்தை அகற்ற அக்கட்சிகள் விரும்புகின்றன. “ஆனால், சிறப்புத் தகுதி அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்கமுடியாது. “பி.ஆா். அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டம் மட்டும்தான் ஜம்மு-காஷ்மீரில் பின்பற்றப்படும். “மக்களின் ஆசி எனக்கு இருக்கும் வரை அக்கட்சிகளின் செயல்திட்டம் ஒருபோதும் வெற்றிபெறாது,” என்று கூறினார். “காங்கிரஸ் கட்சி முன்பு மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தியது. இப்போது ஜாதி, இனம் ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.“ஒற்றுமையே பாதுகாப்பு என்பதை உணா்ந்து, மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,” என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி சக்கரமில்லாத வாகனமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வாகனத்தின் ஓட்டுநா் இருக்கையில் அமர பெரும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.மக்களுக்காகவும் மாநிலத்தின் வளா்ச்சிக்காகவும் பணியாற்றும் எந்த நோக்கமும் அவா்களிடம் இல்லை. மக்களிடம் கொள்ளையடிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டது அக்கூட்டணி. எதிா்வரும் 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தின் வளா்ச்சி புதிய உச்சங்களை எட்ட வேண்டுமெனில், மாநிலத்தில் ஆளும் மகாயுதி கூட்டணியால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மராத்திக்கு செம்மொழி தகுதி வழங்குவது குறித்து அக்கட்சி ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஆனால், பாஜக அரசு மராத்திக்கு செம்மொழி தகுதி வழங்கியுள்ளது.கடந்த இரு ஆண்டுகளில் அந்நிய முதலீட்டில் மகாராஷ்டிரம் முதலிடம் பெற்றுள்ளது. நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் நாட்டின் மொத்த அந்நிய முதலீட்டில் 50%க்கு மேல் மகாராஷ்டிரம் ஈா்த்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை