சயாம்-பர்மா மரண ரயில்பாதை கொடுமை: வரலாற்றுச் சான்றாகத் திகழ்ந்த கடைசி மனிதரும் காலமானார்

  தமிழ் முரசு
சயாம்பர்மா மரண ரயில்பாதை கொடுமை: வரலாற்றுச் சான்றாகத் திகழ்ந்த கடைசி மனிதரும் காலமானார்

சிரம்பான்: சயாம் - பர்மா (இன்றைய தாய்லாந்து - மியன்மார்) மரண ரயில் பாதைக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடைசி மனிதராக இருந்த ஆறுமுகம் கந்தசாமி சனிக்கிழமை (நவம்பர் 9) காலமானார். அவருக்கு வயது 97.இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், ஜப்பானியர்களின் கொடுங்கோல் ஆட்சியின்போது சயாம் - பர்மா இடையே ரயில்பாதை அமைக்கும் பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு, வதைக்கப்பட்டதில் ஏறக்குறைய நூறாயிரம் அப்பாவித் தமிழர்கள் மாண்டுபோயினர். அப்போது, அங்கிருந்து ஏராளமானோர் தப்பித்து, நடந்தே மலேசியா சென்றுசேர்ந்தனர். அவர்களில் பலர் காலமாகிவிட்ட நிலையில், இறுதிச் சான்றாகத் திகழ்ந்த திரு ஆறுமுகம் கந்தசாமியும் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுவிட்டார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3.26 மணிக்குத் திரு ஆறுமுகத்தின் உயிர்பிரிந்ததாக அவருடைய மகன் ஏ. சுதாகரன், 45, தெரிவித்தார்.“என் தந்தையாரின் மறைவால் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக, பேரப் பிள்ளைகளுக்கும் கொள்ளுப்பேரப் பிள்ளைகளுக்கும் அன்பான தாத்தாவாக அவர் விளங்கினார். அவர்தான் எங்களின் கதாநாயகன்.“16 ஆண்டுகளுக்குமுன் எங்கள் தாயார் (கல்யாணி) இறந்துவிட்ட நிலையில், எங்கள் தந்தையார் தம்மால் முடிந்த அளவிற்குத் தொடர்ந்து எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார்,” என்றார் திரு சுதாகரன்.தம் தந்தையார் உற்சாகமான, நலமான மனிதர் எனக் குறிப்பிட்ட திரு சுதாகரன், கிட்டத்தட்ட 100 வயதை நெருங்கிய நிலையிலும் பல பள்ளிகளும் மாணவர்கள்முன் உரையாற்ற அவருக்கு அழைப்பு விடுத்து வந்ததாகக் கூறினார்.“97 வயதிலும் அவரது நினைவாற்றல் சற்றும் குறையவில்லை,” என்றார் திரு சுதாகரன்.திரு ஆறுமுகம் - திருவாட்டி கல்யாணி இணையர்க்கு 13 பிள்ளைகளும், 38 பேரப் பிள்ளைகளும், 21 கொள்ளுப்பேரப் பிள்ளைகளும் உள்ளனர். அஞ்சலி செலுத்துவதற்காக நெகிரி செம்பிலான் மாநிலம், லிங்கி போர்ட் டிக்சன், ருமா ரக்யாட்டில் உள்ள குடும்ப வீட்டில் திரு ஆறுமுகத்தின் நல்லுடல் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை