மாஸ்கோ மீது உக்ரேன் தாக்குதல்

  தமிழ் முரசு
மாஸ்கோ மீது உக்ரேன் தாக்குதல்

மாஸ்கோ: உக்ரேன், ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) மாஸ்கோவை நோக்கி 25 வானூர்திகளைப் பாய்ச்சித் தாக்குதல் நடத்தியது.அதன் காரணமாக மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களில் இரண்டை மூட நேரிட்டது என்று ர‌ஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவே ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரேன் நடத்தியிருக்கும் ஆகப் பெரிய வானூர்தித் தாக்குதலாகும்.மாஸ்கோவின் ராமஸ்கோய, கொலொமென்ஸ்கி (Ramenskoye, Kolomensky) வட்டாரங்களில் அந்த வானூர்திகள் அழிக்கப்பட்டதாக அந்நகர மேயர் செர்ஹெய் சொப்யானின் கூறினார். மாஸ்கோவின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 21 மில்லியனுக்கும் அதிகமாகும். “முதலில் எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி வானூர்திகளின் இடிபாடுகள் விழுந்த இடங்களில் சேதமோ உயிரிழப்போ ஏதும் இல்லை,” என்று திரு சொப்யானின் டெலிகிராம் செயலிவழி தெரிவித்தார். அந்த இடங்களில் அவசரச் சேவையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.ராமஸ்கோய வட்டாரம், கிரெம்லினுக்குத் தென்கிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் அப்பகுதி மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியது. அப்போதைய நிலவரப்படி அதுவே உக்ரேன், மாஸ்கோ மீது மேற்கொண்ட ஆக மோசமான தாக்குதலாக இருந்தது. அதில் ர‌ஷ்ய ஆகாயத் தற்காப்புப் பிரிவுகள் 20 வானூர்திகளை அழித்தன.

மூலக்கதை