24 மணிநேரத்தில் 6 ஒப்பனை அறுவை சிகிச்சைகள்; உயிரிழந்த பெண்
பெய்ஜிங்: பெண் ஒருவர் 24 மணிநேரத்தில் ஆறு ஒப்பனை அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டதை அடுத்து உயிரிழந்தார்.ஒப்பனை அறுவை சிகிச்சைகளைச் செய்த மருந்தகம் மீது பெண்ணின் குடும்பத்தார் வழக்கு தொடுத்து, இழப்பீடாக 1.2 மில்லியன் யுவான் (S$221,549) கோரினர்.தமது ஆறு அறுவை சிகிச்சைகளுக்கு 40,000க்கும் அதிகமான யுவானை அந்தப் பெண் கடனாகப் பெற்றதாகக் கூறப்பட்டது. கண்ணிமை, மூக்கு ஆகியவற்றுக்கான அறுவை சிகிச்சைகளை 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி செய்துகொண்டார். இதற்கு ஐந்து மணிநேரம் பிடித்தது.அதையடுத்து தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பை அகற்றும் அறுவை சிகிச்சை அவருக்குச் செய்யப்பட்டது. மறுநாள் காலை, அந்தக் கொழுப்பு பெண்ணின் முகத்திலும் மார்பகங்களிலும் செலுத்தப்பட்டது. இதற்கும் ஐந்து மணிநேரமானது. இருப்பினும், வீடு திரும்ப இருந்தபோது மின்தூக்கி அருகே அந்தப் பெண் திடீரெனச் சரிந்து விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சையை அடுத்து மோசமான மூச்சுத்திணறல் காரணத்தால் அவர் உயிரிழந்ததாகக் கண்டறியப்பட்டது.பெண் உயிரிழந்தபோது அவரின் மகளுக்கு எட்டு வயது; மகனுக்கு நான்கு வயது.மருந்தகம் 200,000 யுவான் வழங்கியது. இருப்பினும், ஓர் உயிர் போனதற்கு குறைந்தது ஒரு மில்லியன் யுவான் தரவேண்டும் என்று மருந்தகத்திடம் பெண்ணின் கணவர் கூறிவிட்டார். அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்தகத்திடம் முறையான சட்ட ஆவணங்கள் இருந்தன. இரு மருத்துவர்களும் சட்டபூர்வமாக உரிமம் பெற்றவர்கள். அத்துடன் அகற்றப்பட்ட கொழுப்பும் மருத்துவத் தரக்குறியீட்டுடன் ஒத்துப்போனது. இதையடுத்து, பெண்ணின் உடல்நிலையும் அவரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பதால் தொடக்கத்தில் விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையான ஒரு மில்லியன் யுவானை மேல்முறையீட்டை அடுத்து பாதியாக்கியது நீதிமன்றம்.இதற்கிடையே, 24 மணிநேரத்தில் ஆறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அந்த மருத்துவர்கள் மனசாட்சியற்றவர்கள் என்று இணையவாசிகள் வெகுண்டெழுந்து பதிவிட்டு வருகின்றனர்.