ரஷிய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் பேச்சு
வாஷிங்டன்,உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடயே, அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, தான் வெற்றி பெற்றால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் பேசி வந்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்றுள்ள அவர் போரை நிறுத்த முயற்சிகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொலைபேசி வாயிலாக நடைபெற்ற இந்த உரையாடலின் போது,உக்ரைன் உடனான போரை தீவிரப்படுத்த வேண்டாம். போரை கைவிட வேண்டும் என புதினை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 'டிரம்புக்கும், புதினுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இதனை ஏற்கவோ அல்லது எதிர்க்கவோ முடியாது' என உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.