தமிழர் நிலம் திருப்பித் தரப்படும்: இலங்கை அதிபர்
யாழ்ப்பாணம்: இலங்கை அரசாங்கம் ஆக்கிரமத்திருக்கும் அந்நாட்டுத் தமிழர்களின் நிலங்கள் அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் அனுராகுமார திசாநாயக உறுதியளித்துள்ளார்.‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற ஊடகங்கள் அத்தகவலை வெளியிட்டன. அதேவேளை, இலங்கைக்குக் சொந்தமான நீர்ப்பகுதிகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் ‘சட்டவிரோதமாக’ மீன்பிடிப்பது தடுக்கப்படும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.புதிய இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு திசாநாயக யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைச் சந்தித்தபோது அவ்வாறு கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைச் சந்தித்தார்.வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திரு திசாநாயக யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். தனது கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன உள்ள தேசிய மக்கள் சக்திக் (National People’s Power) கூட்டணிக்கு வாக்குகளைத் திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்பில் பலர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் உரையாற்றும்போது திரு திசாநாயக, அதிக தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிக்குச் சொந்தமான நீர்வளங்களைத் தமிழக மீனவர்கள் அழிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். தமது அரசாங்கம், நீர்வளங்கள் அவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் என்றும் இலங்கை மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.திரு திசாநாயக அவ்வாறு பேசியதற்குத் திரண்டிருந்தோரிடையே நல்ல வரவேற்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) கைது செய்யப்பட்டதுடன் இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக அந்நாட்டுக் கடற்படை மூன்று இந்திய மீன்பிடி கப்பல்களைத் தடுத்து வைத்தது. இத்தகைய சூழலில் திரு திசாநாயகவின் உரை இடம்பெற்றுள்ளது.