தஞ்சை பெரிய கோவிலில் இந்தி கல்வெட்டுகள் திணிப்பா? - தமிழக அரசு விளக்கம்
சென்னை,தஞ்சாவூர் பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு, இந்தி மொழியிலான கல்வெட்டுகள் வைக்கப்படுவதாகவும், அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ முற்றிலும் பொய்யானது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அப்போதே இந்திய தொல்லியல் துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. மராட்டியர் ஆட்சிக்காலத்தில் கோவிலில் பதிக்கப்பட்ட தேவநாகரி வரி வடிவ கல்வெட்டுகளை இந்தி எழுத்துக்கள் என்று தவறாக திரித்து வீடியோ வெளியிடப்பட்டு உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி விளக்கம் அளித்திருந்தார். வதந்தியை பரப்பவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.