தேசிய சீனியர் ஆக்கி: அரியானா, மணிப்பூர் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்
சென்னை,14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 30 மாநில அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும். நேற்று 'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் அரியானா அணி 8-0 என்ற கோல் கணக்கில் மிசோரமை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது .இதனால் முதலிடம் பிடித்த அரியானா காலிறுதிக்கு முன்னேறியது. 'எச்' பிரிவில் மணிப்பூர் 10-0 என்ற கோல் கணக்கில் அசாமை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. இதனால் முதலிடம் பிடித்த மணிப்பூர் காலிறுதிக்குள் நுழைந்தது. நேற்றுடன் லீக் சுற்று முடிவடைந்தது. இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும்.