விராட், ரோகித்தை விமர்சித்த பாண்டிங்.. பதிலடி கொடுத்த மைக் ஹஸ்சி
சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது. முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வருகிறார். அதனால் கடந்த 5 வருடங்களில் விராட் கோலி 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் விமர்சித்திருந்தார். அதனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இந்திய அணியை பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்? என்ற வகையில் கம்பீர் அதிரடியான பதிலை கொடுத்தார். மேலும் ஆஸ்திரேலிய அணியை பற்றி சிந்தியுங்கள் என்றும் கம்பீர் கூறியிருந்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மா, விராட் கோலி நன்றாக விளையாடுவார்கள் என்றும் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கம்பீர் சொல்வது போல விராட் கோலி, ரோகித் சர்மா கண்டிப்பாக அசத்துவார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். ஆனால் முதல் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"முதல் போட்டியிலேயே மனதளவிலும் திறன் அளவிலும் அவர்கள் எந்தளவுக்கு இருக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும். சமீபத்தில் இந்தியா சந்தித்த தோல்வியால் அவர்கள் வேதனையை சந்தித்திருப்பார்கள். அவர்கள் நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள். அவர்கள் ரன்கள் அடிக்கவில்லை என்று கம்பீர் சொல்லி நாம் கேட்டோம். அவர்களைப் போன்ற சாம்பியன் வீரர்களை முடிந்தவர்களாக எழுதுவது வேடிக்கையான விஷயமாகும். கடந்த காலங்களிலும் விமர்சனங்களை தாண்டி அவர்கள் சிறப்பாக விளையாடி உள்ளார்கள். எனவே அவர்கள் ஆஸ்திரேலியாவில் நன்றாக செயல்படுவார்கள் என்று நான் ஆதரிக்கிறேன். அவர்கள் இந்தியாவுக்காக விளையாடக்கூடிய பெருமை மிகுந்த வீரர்கள். ஆனால் இப்போதும் ஆஸ்திரேலியாதான் தொடரை வெல்லும் அணியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்" என கூறினார்.