ஐ.பி.எல்.: லக்னோ அணியிலிருந்து வெளியேறியது ஏன்..? - கே.எல். ராகுல் விளக்கம்
மும்பை, ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் அய்யர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது லக்னோ அணியின் கேப்டனான லோகேஷ் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அவர் லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று கருத்துகள் நிலவின. இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக சுதந்திரத்துடன் விளையாடுவதற்காகவே லக்னோ அணியிலிருந்து வெளியேறியுள்ளதாக ராகுல் கூறியுள்ளார்.இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய டி20 அணியில் நான் நீண்ட காலமாக இல்லை. ஒரு வீரராக நான் தற்போது எங்கே இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். எனவே இந்த ஐ.பி.எல். தொடரில் என்னுடைய கிரிக்கெட்டை மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்காக ஆவலுடன் உள்ளேன். இந்திய டி20 அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய முதன்மை இலக்காகும்" என்று கூறினார்.