'புஷ்பா 2'- படத்தில் பணிபுரிவதை உறுதி செய்த தமன்

  தினத்தந்தி
புஷ்பா 2 படத்தில் பணிபுரிவதை உறுதி செய்த தமன்

ஐதராபாத்,தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.இதற்கிடையில், ஐதராபாத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "எனக்காக 'புஷ்பா 2' காத்திருக்கிறது. ஆகையால் கிளம்ப வேண்டும்" என்று தனது பேச்சின் இறுதியில் குறிப்பிட்டார். இந்தப் பேச்சின் மூலம் 'புஷ்பா 2' படத்தின் பின்னணி இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருவது உறுதியாகி இருக்கிறது.இந்த படத்தில் உள்ள பாடல்களுக்கு மட்டுமே தேவி ஸ்ரீபிரசாத் பணிபுரிந்து வருகிறார். இந்த தகவல் கடந்த வாரம் வெளியானாலும், படக்குழுவினர் உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள். தற்போது தமனின் பேச்சு மூலம் அது உறுதியாகி இருக்கிறது.

மூலக்கதை