அவரை தவிர வேறு யாராலும் எங்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாது - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

  தினத்தந்தி
அவரை தவிர வேறு யாராலும் எங்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாது  ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

பெர்த்,இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது.ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியாது என அந்த அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹடின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்களால் நிற்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஜெய்ஸ்வால் சிறந்த வீரர் என்பது எனக்கு தெரியும். ஆனால் இதற்கு முன் அவர் ஆஸ்திரேலியாவுக்கு வந்ததில்லை. எனவே அவர் இங்குள்ள பவுன்சை சரியாக எதிர்கொள்வார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. பெர்த் மைதானத்தில் ஓப்பனிங் செய்வது மிகவும் கடினமான வேலை. அதே சமயம் ரிஷப் பண்ட், அலெக்ஸ் கேரி ஆகியோர் தங்களுடைய அணிகளுக்கு முக்கிய வீரர்களாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு தருணத்தில் இந்த தொடரில் டாப் ஆர்டர் தகர்க்கப்படும். இரண்டு அணிகளின் வேகப்பந்து வீச்சும் நன்றாக இருக்கிறது. அதனால் இரு அணிகளின் பவுலர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களை தகர்ப்பார்கள். எனவே அலெக்ஸ் கேரி 7-வது இடத்திலும் ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும் தங்களுடைய அணிகளுக்கு முக்கிய வேலையை செய்வார்கள் என்று நம்புகிறேன். அந்த இருவருமே அதிரடியாக விளையாடக் கூடியவர்கள்" என்று கூறினார்.

மூலக்கதை