ஜார்க்கண்ட்டில் நாளை முதற்கட்ட தேர்தல்: முன்னேற்பாடுகள் தீவிரம்
ராஞ்சி,ஜார்க்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன.இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் நாளையும் (13ம் தேதி) 2ம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.அதன்படி, முதற்கட்ட தேர்தல் 43 தொகுதிகளுக்கு நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.முன்னதாக நாளை நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 37 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 68 லட்சத்து 73 ஆயிரம் பேர் ஆண் வாக்காளர்கள், 68 லட்சத்து 36 ஆயிரம் பேர் பெண் வாக்காளர்கள், 303 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 63 ஆயிரத்து 601 வாக்காளர்கள் 85 வயதை பூர்த்தி செய்தவர்கள் எனவும், 1.91 லட்சம் வாக்காளர்கள் மாற்றுத்தினறாளிகள் எனவும், 6.51 லட்சம் வாக்காளர்கள் 18 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.