பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

  தினத்தந்தி
பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி  பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

சென்னை, பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-"7.11.2024 நாளிட்ட செய்தித்தாளில் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளபடி, தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்த K.பாலாஜி என்பவர், தனக்கு பதிலாக வேறொரு நபரைக் கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேற்காணும் பொருள் குறித்து சென்னை – 6, தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 25375 /டி3 / 2024, நாள் 9.11.2024ன்-படி, பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு; ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளாமல் வெளிநபரைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடத்துவது குறித்து, பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளிப் பார்வையின்போது ஏதேனும் கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்த புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ கண்டிப்பாக அப்புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்டக் கல்வி அலுவலரே (தொடக்கக் கல்வி) விசாரணை மேற்கொண்டு, அவ்விசாரணையில் உண்மையிருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது அத்தகவலை மாவட்டக் கல்வி அலுவலருக்கு அளிக்கத் தவறும் பட்சத்தில், தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடக்கக் கல்வி அலகில் தகுதியுள்ள காலிப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் (SMC) நியமனம் பெற்ற 6,053 எண்ணிக்கையில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்களா என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கோரப்பட்டது. இவ்வியக்ககச் செயல்முறைகள் அனுப்பப்பட்ட நிலையில், மாவட்டக் கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து வேறு நபர்களைக் கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விவர அறிக்கை ஏதும் பெறப்படவில்லை. ஆகையால், மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து எவ்வித அறிக்கையும் பெறப்படாத நிலையில், சமூக ஊடகங்களில் வரப் பெற்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியாகும். அச்செய்திக் குறிப்பில் குறிப்பிட்டவாறு 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நடைபெறவில்லை."இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை