உதயநிதி உடை விவகாரம்: புதிய மனுக்களை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

  தினத்தந்தி
உதயநிதி உடை விவகாரம்: புதிய மனுக்களை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

சென்னை, தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தலைமை செயலக ஊழியர் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, தமிழ் கலாசார ஆடையான வேட்டி-சட்டை அல்லது சாதாரண உடை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சத்தியகுமார் என்பவர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சூழலில், இதே கோரிக்கையுடன் வக்கீல் பிரவீண் சமாதானம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், "அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிந்து துணை முதல்-அமைச்சர் கலந்து கொண்டால், அது தி.மு.க. சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி போல் தோற்றத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் அவர் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறார். எனவே, கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதியின் டி-சர்ட் தொடர்பான இரு புதிய வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒரே விவகாரத்துக்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏற்கனவே விசாரணையில் உள்ள வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி விண்ணப்பிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

மூலக்கதை