வரலாறு படைத்த தேசிய மக்கள் சக்தி... அனுரா கூட்டணி பெரும்பான்மை வெற்றி - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 137 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால் நிதி நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வருவதற்கும், வறுமையைப் போக்குவதற்கும், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான கொள்கைகளைத் தொடர மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 137 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 35 ஆசனங்களையும், இலங்கை தமிழரசு கட்சி 6 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது. இலங்கையை பொறுத்தமட்டில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் 22 தொகுதிகளில் இருந்து 196 உறுப்பினர்களை வாக்காளர்கள் நேரடியாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்கின்றனர். எஞ்சிய 29 ஆசனங்கள் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு கட்சியும் பெறும் விகிதாசார வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும். தேர்தலில் வாக்களித்ததன் பின்னர் ஜனாதிபதி அனுர தெரிவிக்கையில், இது இலங்கைக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக நாம் பார்க்கிறோம். வலுவான பாராளுமன்றத்தை அமைப்பதற்கான ஆணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம், இந்த ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். மேலும், இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் செப்டம்பரில் தொடங்கி மாற்றம் ஏற்பட்டுள்ளது, அது தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.