முக்கிய அரசியல்வாதிகளை தூக்கி எறிந்த இலங்கை மக்கள் - ஆட்சியமைக்கு அநுர அரசு! - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
முக்கிய அரசியல்வாதிகளை தூக்கி எறிந்த இலங்கை மக்கள்  ஆட்சியமைக்கு அநுர அரசு!  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று 225 ஆசனங்களில் 159 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.தற்போதைய அரசியலமைப்பின் கீழ் விருப்பு வாக்குகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, எந்தவொரு தனிக் கட்சியாலும் இவ்வளவு பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 2010 இற்கு பிறகு மிகக் குறைந்த வாக்குப்பதிவு கொண்ட வாக்கெடுப்பில் 40 ஆசனங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 3 இடங்கள் கிடைத்தன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 8 ஆசனங்களும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு பெற்ற புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்தனியாக 1 இடங்களும் கிடைத்தன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 வெற்றி பெற்றது. சர்வஜன பலய, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், யாழ்ப்பாணம் – சுயேட்சை குழு 17 மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி தலா ஒரு ஆசனத்தைப் பெற்றன. வாக்களித்த உடனேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தாம் பலமான ஆணையை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் மக்களுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லாததால் ஆட்சியமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை என்றார். வடக்கு பகுதியை பொறுத்தளவில், தமிழ்த் தேசியம் காக்கும் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன், பல அரசாங்கங்களில் அமைச்சராகவும், பல பொறுப்புக்களை வகித்தவராகவும், மூத்த அரசியல்வாதியாகவும் அடையாளப்படுத்தப்படும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பெரும் தோல்வியடைந்துள்ளனர். மேலும் தென்னிலங்கையில் மிக முக்கிய அரசியல்வாதிகளாக, அமைச்சர்களாக, பல பொறுப்புக்களை வகித்தவர்களாக காணப்பட்ட பல அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற பிரவேசம் நிறைவடைந்துள்ளது.எதிர்பாராத பல தோல்விகள், சொந்த தொகுதியிலேயே படு தோல்வி என்று தோல்விகளின் எண்ணிக்கை கடுமையாக பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு அதிகரித்துள்ளது.தந்தையின் கொடூர மரணத்தை அடுத்து அரசியலுக்குள் அடி எடுத்து வைத்து, கட்சி மாறினாலும், தன்னை நாடாளுமன்றத்தில் மிக வலுவான ஒரு பெண் உறுப்பினராக நிலைநிறுத்திக் கொண்ட ஹிருணிக்காவையும் மக்கள் இம்முறை புறக்கணித்துள்ளனர்.தனக்கென்று சொந்த ஊரில் மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகேவும் படுதோல்வியை சந்தித்துள்ளார். அத்துடன், சுசில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா, புத்திக பத்திரண, சன்ன ஜயசுமன, ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, ரோசி சேனாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, திலித் ஜயவீர, நிமல் லான்சா, பிரசன்ன ரணவீர, பிரேமலால் ஜயசேகர, அருந்திக பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, ரொசான் ரணசிங்க, பிரமித்த பண்டார தென்னக்கோன், ரோஹன திஸாநாயக்க, நிபுண ரணவக்க, கஞ்சன விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன என்று பல அரசியல் தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 159 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குள் நுழைபவர்களில் மிக அதிகளவானவர்கள் புது முகங்களாகும். மேலும் பொதுத் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நன்றியையும் தெரிவித்திருந்தார்.நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சிக்கு இந்தியா வாழ்த்துகளைத் தெரிவித்தது.கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கட்சியின் வெற்றிக்காக ஜனாதிபதியும் NPP தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.  

மூலக்கதை