விராட் வேண்டாம்... ஆர்.சி.பி. கேப்டனாக இந்த வீரரை நியமிக்கலாம் - ராபின் உத்தப்பா
மும்பை,ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவில் வரும் 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. நட்சத்திர வீரர்களை கொண்டுள்ள ஆர்.சி.பி. அணி, ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல ஒவ்வொரு ஆண்டும் போராடி வருகிறது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்.சி.பி) 3 வீரர்களை தக்க வைத்துள்ளது. அதன்படி விராட் கோலி ( ரூ. 21 கோடி), ரஜத் பட்டிதார் ( ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். தொடர் ஆரம்பம் ஆன முதல் தற்போது வரை 18 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த டு பிளெஸ்சிஸை அந்த அணி விடுவித்தது. இதையடுத்து அந்த அணிக்கு கேப்டன் தேவைப்படுகிறார். மேலும், விராட் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதாரை கேப்டனாக நியமிக்கலாம் என இந்திய முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரஜத் பட்டிதாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பட்டிதார் அந்த பொறுப்பை ஏற்கக் காரணம் பெங்களூர் அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய தலைவர் தேவைப்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தகுந்தவாறு அவரை கேப்டனாக நியமிக்க இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ரஜத் பட்டிதார் பெங்களூர் அணியை நிர்வகிக்க கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.