பணய கைதிகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சன்மானம் - இஸ்ரேல் அறிவிப்பு
ஜெருசலேம்,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சன்மானம் தரப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.காசா முனைக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த சன்மான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.பணய கைதிகளை கண்டுபிடித்து எங்களிடம் ஒப்படைப்பவர்களுக்கு ஒவ்வொரு பணய கைதிக்கும் தலா 5 மில்லியன் டாலர்கள் என்ற அடிப்படையில் (இந்திய மதிப்பில் 42 கோடி ரூபாய்) சன்மானம் அளிக்கப்படும். பணய கைதியை எங்களிடம் ஒப்படைக்கும் நபரின் அடையாளம் பாதுகாக்கப்படும். அந்த நபர் குடும்பத்துடன் காசாவில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல இஸ்ரேல் அழைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும். பணய கைதிகளின் இருப்பிடத்தை அறிந்து அவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அந்த முயற்சிகளை கைவிடப்போவதில்லை. அனைத்து பணய கைதிகளையும் உயிருடனோ? பிணமாகவோ? மீட்கும்வரை போரை தொடருவோம். யாரேனும் பணய கைதிகளுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தால் அவர்கள் கொல்லப்படுவர் என்று பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.