இலங்கையை அலறவிட்ட சிங்கப்பெண் - யார் இந்த ஹரிணி அமரசூரிய? - லங்காசிறி நியூஸ்
இலங்கை அரசியலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவை எதிர்த்து நின்ற பெண் தான் தற்போதைய பெண் பிரதமர் ஹரிணி அமரசூரிய. இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவை வெற்றிப் பெற வைப்பதற்காக, 21500 கிலோ மீற்றர் வரை பயணம் செய்து இலங்கையின் மூலை முடுக்குகளுக்கு அனல் பறக்க பேசி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். உங்களிடம் அரசியல் பின்புலம் இருக்கிறது, நீண்ட காலம் அதிகாரத்தில் திகைத்துள்ளீர்கள், பணம் மற்றும் செல்வாக்கு என அனைத்தும் இருக்கலாம். ஆனால் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறுவோம். நாடாளுமன்றத்தையும் கலைப்போம் என கூறி பல இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை செய்தார். சாதாரண தேயிலை தோட்ட தொழிலாளியின் மகளான இவர், ஆரம்பக் காலத்தில் கல்வி கல்வி என்ற ஒற்றை முழக்கத்தை மட்டுமே முன்வைத்து இலங்கையின் அரியணையில் அமர்ந்துள்ளார்.1970 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி இலங்கையின் தலைநகரான கொழும்பில் சாதாரண குடும்பத்தில் ஹரிணி அமரசூரிய பிறந்தார். சிறிய வயதில் இருந்தே கல்வியின் மீதான தனது ஆர்வத்தால் பள்ளி கல்வியை கொழும்பில் முடித்தார்.அதன் பின், 1991 முதல் 1994 வரை இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள இந்துக் கல்லூரியில் சமூகவியல் படிப்பதற்காக இந்திய அரசின் உதவித்தொகையைப் பெற்று, சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.தொடர்ந்து மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்று, மானிடவியல் பட்டம் பெற்றார். அதையடுத்து ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார். தனது கலாநிதி பட்டத்தை முடித்த பின்னர் 2011 ஆம் ஆண்டு சமூக விஞ்ஞானத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அதையடுத்து தான் அவர் தனது பார்வையை அரசியல் பக்கம் திருப்பினார். 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் முதல் வரிசையில் நின்று குரலெழுப்பி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என போராடினார். அதுமட்டுமின்றி, குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள், இளைஞர்கள், அரசியல், பாலின வளர்ச்சி, உலகமயமாக்கல் போன்ற தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.இவர் 2019 இல் தேசிய புத்திஜீவிகள் அமைப்பில் இணைந்தார். மற்றும் 2019 இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் போது NPP வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்காக பிரச்சாரம் செய்தார். 12 ஆகஸ்ட் 2020 அன்று, அவர் 2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைத்தொடர்ந்து இலங்கையின் 16வது நாடாளுமன்றத்தில் நுழைவதற்கான தேசியப் பட்டியல் வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். தேசியப் பட்டியல் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்ட பிறகு, திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மூத்த விரிவுரையாளராக அவர் தனது சேவையைத் தொடர முடியுமா என்பது பற்றிய குழப்பமும் கவலையும் எழுந்தன.இருப்பினும் அவர் ஒரு நேர்காணலில், தனது அரசியல் வாழ்க்கை மற்றும் பாராளுமன்ற அரசியலைத் தொடரும் பொருட்டு திறந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இலங்கையில் இன, மத மற்றும் அரசியல் பிளவுகளைப் போக்குவதற்கும், தேசிய ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் அவர் நல்லிணக்கம் மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.அதன் பின் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலிக்கத் தொடங்கிய ஹரிணி அமரசூரியாவின் குரல், சாமானியர்களின் குரலாக ஒலித்தது. மேலும் அவர் பாலின சமத்துவம் மற்றும் LGBTQ+ உரிமைகளுக்காக வாதிட்டார், விலங்குகள் நலனுக்கான நாடாளுமன்றக் குழுவில் ஈடுபட்டார். மேலும் இலங்கையில் நிலுவிய பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, குறைந்துக்கொண்டே வரும் கல்வி தரம் என இவர் எழுப்பிய கேள்விகள் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கிவிற்கு ஆதாரவாக பிரச்சாரம் செய்ய வீதியில் இறங்கினால் ஹரிணி அமரசூரிய. மேலும் இலங்கை அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது, 52% வாக்குகள் கொண்ட பெண்கள் தான் என்பதை நன்கு உணர்ந்திருந்த இவர், பெண்களுக்கான பிரமாண்ட மாநாட்டை நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.இந்நிலையில் தான் இலங்கை ஜனாதிபதி தேர்தலில், ஒற்றை பெண்மணியாக அத்தனை பலங்களையும் எதிர்ந்து நின்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவை வெற்றிப்பெற வைத்தார். அதையும் தொடர்ந்து, தன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த ஹரிணி அமரசூரியவை இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்தார்.அமரசூரிய 655,289 வாக்குகளைப் பெற்று கொழும்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தார். கல்வி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமரசூரிய பள்ளிகளில் இருந்து அரசியல் செல்வாக்கை அகற்றும் நோக்கத்துடன், பள்ளி நிர்வாகிகளால் அரசியல்வாதிகளை பள்ளி விழாக்களுக்கு அழைக்கும் நீண்டகால நடைமுறையை நிறுத்திக் கொண்டு கல்வி சீர்திருத்தங்களைத் தொடங்கினார். கல்வி துறை அமைச்சர் பொறுப்பு இவருக்கே வழங்கப்பட்டுள்ள நிலையில், தெற்காசிய நாடுகளில் எந்தவொரு அரசியல் பின்புலமும் இன்றி, சாதாரண குடும்பத்தில் பிறந்து பிரதமர் பதவியை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.இச்சூழலில் தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையை புதிய பிரதமாக பொறுப்பேற்றுள்ள ஹரிணி அமரசூரிய, மீட்பாரா? மீண்டும் இலங்கையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.