நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை தீர்ப்பு

  தினத்தந்தி
நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை தீர்ப்பு

சென்னை,கடந்த 3-ந்தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில், தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கஸ்தூரி கூறிய நிலையில், அவர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் காவல்நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.அந்த புகாரின்பேரில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். இதனிடையே, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர். அவரை வரும் 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, நடிகை கஸ்தூரி தரப்பில், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.

மூலக்கதை