இந்தியாவுக்கு எதிரான டி20; விதிமுறைகளை மீறிய தென் ஆப்பிரிக்க வீரர் - அபராதம் விதித்த ஐ.சி.சி

  தினத்தந்தி
இந்தியாவுக்கு எதிரான டி20; விதிமுறைகளை மீறிய தென் ஆப்பிரிக்க வீரர்  அபராதம் விதித்த ஐ.சி.சி

துபாய்,சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4வது டி20 போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு தெரிவித்ததற்காக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜிக்கு ஐ.சி.சி கண்டனம் தெரிவித்ததோடு, அபாராதமும் விதித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 4வது போட்டியில் தென் ஆப்பிரிக்க பவுலர் ஜெரால்ட் கோட்ஜி 3 ஓவர்கள் பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆட்டத்தின் 15 ஓவரில் ஜெரால்ட் கோட்ஜி வீசிய பந்துக்கு நடுவர் 'வைட்' என்று கூறியுள்ளார். இதற்கு கோட்ஜி நடுவரிடம் எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டதாக கூறப்படுகிறது. சர்வதேச போட்டியின் போது நடுவர்களின் முடிவில் கருத்து வேறுபாடு கூறுவது தொடர்பான ஐ.சி.சி நடத்தை விதி 2.8 ஐ கோட்ஜி மீறியது கண்டறியப்பட்டு அவருக்கு இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 24 வயதான ஜெரால்ட் கோட்ஜி, அவர் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதால் போட்டிக் கட்டணத்தில் இருந்து அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியின்படி ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50 சதவீதம் அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்படும். 24 மாதத்துக்குள் ஒரு வீரர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியிழப்பு புள்ளிகளை பெற்றால், அவர் சில போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுவார். இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் இருந்து தடை செய்யப்படுவதற்கு சமமானது.

மூலக்கதை