சட்டம் - ஒழுங்கை திமுக அரசு அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
சென்னை,அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயிலில் வழக்கறிஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கிவரும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளாகவே வழக்கறிஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தும் அளவிற்கு சட்டம் - ஒழுங்கை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட செய்தியின் சுவடுகள் மறைவதற்கு முன்பாகவே ஒசூரில் வழக்கறிஞர் மீது பட்டப்பகலில் நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித் தாக்குதல் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை மீண்டும், மீண்டும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.எனவே, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.